தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் தலைவராக இருந்த திலீபன் (இராசையா பார்த்திபன்) 1987ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகளை வைத்து உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 31 வருடங்களாகின்றன.
ஐந்து அம்ச கோரிக்கைகள்
1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல்.திலீபன், அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.
இந்திய வல்லாதிக்க அரசு நினைத்திருந்தால், திலீபனை காப்பாற்றியிருக்க முடியும்.
1987இல் திலீபனின் உயிரில் விளையாடத்தொடங்கிய இந்திய வல்லாதிக்க அரசு, குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள், மற்றும் 1993இல் கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகள் என்று 2009 முள்ளியவாய்க்கால்வரை தனது வஞ்சக, கபட அரசியலால் தமிழினத்தையே சிதைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.